செவ்வாய், 25 மார்ச், 2008

போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம்: ஐ.நா.

இலங்கையில் இடம்பெற்று வரும் போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் போதைவஸ்து மற்றும் குற்றச் செயல்களுக்கான தெற்காசியப் பிரதிநிதி கரி லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள், மிக நீண்ட காலமாக, அதாவது 1983 ஆம் ஆண்டிலிருந்து உக்கிரமாக இடம்பெற்று வரும் போரினால், தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தப் போர்ச் சூழல் தொடர்வதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு மக்கள் முயற்சித்து வருகின்றனர். இதனால், திருட்டுத்தனமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு உதவும் முகவர்களின் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுகின்றோம்.

குறிப்பாக, தற்போது போர் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், இளையவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான கட்டாயச் சூழ்நிலை உருவாகிவருகிறது. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று குடியேற முயற்சிப்பது, களவான மனிதக் கடத்தல்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்கி விடுகிறது.

கிடைக்கப்பெறும் கணிப்பீடுகளின்படி, வருடத்திற்கு குறைந்தது 150,000 பேர் ஆசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு களவாகப் பயணித்து செல்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கை, மனிதக் கடத்தல்கள் விடயத்தில், ஆசியாவில் மிகக்குறைந்த குற்றங்களையே பதிவு செய்திருக்கிறது. இந்தியா, நேபாளம், பங்களாதேஸ், பாகிஸ்தான் என்பன முறையே மிக அதிக வெளிநாட்டு மனிதக் கடத்தல்களைப் பதிவு செய்த நாடுகள் பட்டியலில் உள்ளன.

போர் மோசமாக நடைபெற்று வருவதுடன் 70,000-க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், மனிதக் கடத்தல் விடயத்தில் ஐந்தாம் இடத்திலேயே இலங்கை உள்ளது. இருப்பினும், தற்போது மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளதால், இந்த மனிதக் கடத்தல்கள் வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சிறிலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர் உக்கிரமடைந்து வருவதால், கடந்த ஏப்ரல் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 188,000 பொதுமக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், தற்காலிக அகதி முகாம்கள் மற்றும் தற்காலிக கொட்டகைகள் குடிசைகளில், நிரந்தரமாக நீண்டகாலம் தங்கியிருப்பதுடன், மிக மோசமான துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்காலிக முகாம்களை, நிரந்தரமான வீடுகள் போன்று நீண்ட காலம் தங்குவதற்கு அகதிகளுக்கு வழங்கும்போது, ஒரு வீட்டில் வாழ்கின்ற சுமூகமான சூழ்நிலையை பிள்ளைகள் இழந்து விடுகின்றனர். சிறுவர்களுக்கு கிடைக்கக்கூடிய அன்பும், பரிவும், கவனிப்பும் நிரந்தரமாக கிடைக்காமல் போவதுடன், அவர்கள் மீதான துஸ்ப்பிரயோகமும் தவறான குற்றச்செயல்களும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உருவாகி விடுகின்றன.

இத்தகைய சிறுவர்களும் இளையவர்களும், பல்வேறு துஸ்ப்பிரயோகங்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாவதுடன், இவர்களை களவாக வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்கான சூழ்நிலைகளும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரை, வறுமை, இயற்கை அழிவுகள், தொழில் இன்மை, பாலியல் தொழில் வாய்ப்புக்கள் போன்றன, வெளிநாட்டு மனிதக் கடத்தல்களுக்கான பிரதான காரணங்களாக இருக்கின்ற போதிலும், போர் உக்கிரமடைந்து செல்கின்ற சூழல், இத்தகைய மனிதக் கடத்தல்களை மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும்.

கருத்துகள் இல்லை: