இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.
தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக