வியாழன், 20 மார்ச், 2008

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஜர்தாரி? நாளைக்குள் முடிவாகும்

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பதில் இன்னும் மர்மம் நிலவுகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான மக்தும் அமின் பாஹிம் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. இந்நிலையில் அவரே தற்போது போட்டியிலிருந்து விலகி பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி பெயரை முன்மொழிந்துள்ளார். எனவே யார் அடுத்த பிரதமர் என்பது வியாழக்கிழமைக்குள் தெரிந்துவிடும்.

தற்போதைய நிலையில் பாகிஸ்தானில் அமையவுள்ள கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கப்போவது பாகிஸ்தான் மக்கள் கட்சிதான்.

இந்நிலையில் பிரதமர் பதவி மீது ஜர்தாரி ஆர்வமாக இருப்பதாக செய்திகள் உலாவருகின்றன. எனவே அவருக்கு ஆதரவாக செயல்பட பாஹிம் திட்டவட்டமாக உள்ளார்.

ஜர்தாரியை திங்கள்கிழமை இரவு சந்தித்த பாஹிம், பிரதமர் பதவிக்கு ஜர்தாரியை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.

நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாஹிம், ஜர்தாரி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளேன். இனி முடிவு ஜர்தாரியிடம் உள்ளது என்றார். எனினும் ஜர்தாரியின் நிலை தொடர்பாக கட்சி தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

ஆனால் அடுத்த பிரதமர் யார் என்பது வியாழக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் சையது குர்ஷித் அகமது தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக 5 பேர் பரிசீலனையில் உள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார் சையது.

கருத்துகள் இல்லை: